நீ இருந்திருந்தால் நான் 
இன்னும் நல்லாயிருப்பேன்...

உலகை விட உன்னை
அதிகம் நேசித்திருப்பேன்

தவழும் வயதில்
தனிமையில் விட்டாயே?

கொஞ்சி பேசும் நாட்களை 
குறைத்து கொண்டாயே?

எல்லாம் சொல்லித்தரும் முன்
சொல்லாமல் சென்று விட்டாயே...

உன் கண்களை மூடி என் 
இதயத்தை இருட்டி விட்டாய்!

பௌர்ணமி நிலவை காண முடியா 
தேய்பிறை நான்...

தோழனாய் இருந்திருந்தால்
தவித்து கொண்டிருக்கமாட்டேன்...

தனிமையை தந்து என்னை 
சிதறடித்து விட்டாய்...

அன்பே நீ இருந்திருந்தால்
அடக்கமுள்ளவனாய் இருந்திருப்பேன் உனக்காக...

நான் பெற்று கைவிட்ட
பொக்கிஷம் போல் ஆனாயே!!

உயிர் மட்டுமே நீ இழந்தாய்
உன் பிரிவால் நான் என்னையே இழந்தேன்!!

சொல்லியிருந்தால் நானும் 
கைகோர்த்திருப்பேன் உன்னோடு...

உதிர்ந்த பூவாய் நீ 
பிரிந்த கொடியாய் நானோ?

என் அறியாத வயதில்
அமிழ்ந்து போனாயே?

உடல் தந்த தாயே என் 
உயிர் கொண்டு சென்றாயே!!

வழிகாட்டியாய் இருந்திருந்தால் 
வழிதப்பியிருக்கமாட்டேன்!!

தவமிருந்து பெற்றாய் என்றார்கள் 
ஆனால் தவிக்க விட்டுவிட்டாயே?

சொல்லி கொடுத்திருந்தால்
தோல்வி அடைந்திருக்கமாட்டேன்...

என் நினைவில்லா நேரத்தில் சென்று விட்டு 
இப்போது உன் நினைவை தருகிறாய் ஏனடி?

பக்கத்தில் இருந்திருந்தால் பழி
பெற்றிருக்க மாட்டேன்...
 
என்னை விட்டு செல்லாமல் இருந்திருந்தால் 
இந்த வார்த்தை பூக்கள் உதிர்ந்திருக்காது என் தாயே!!!


நீ இருந்திருந்தால் நான் 
இன்னும் நல்லாயிருப்பேன்….
 


Comments
Leave a Reply