இருபதாண்டுகளுக்கு பிறகு கால்கள்
ஊரை நோக்கி பயணித்தது மனமோ
கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கியிருந்தது...

கடந்த கால இன்ப துன்பங்களை நினைக்க
மனம் அமைதியாய் இருந்தது நீண்ட தூர
பயணம் இந்த வகையில் நன்மையாய் இருந்தது....

தூக்கம் வராமல் ஊரை பற்றிய சிந்தனைகள் வந்தது
கண்கள் புது பொருளை காணப்
போவது போல் ஒருவித எதிர்பார்ப்பு !!

கடந்ததை நினைத்து மனம் சிலேகித்தது
எப்பொழுது உறங்கினேன் என்று
எனக்கே தெரியவில்லை?

அலாரம் அடித்தாற்போல் 5  மணிக்கு
விழித்துக் கொண்டேன்
சூரியனை வரவேற்கும் காலை நேரம்...

இருள் விலக விலக கண்களின்
எதிர்பார்ப்பு அதிகமானது !!

பேருந்து சிறிய நகரை அடைந்தது
இறங்கினேன் பேருந்தை விட்டு பூரிப்போடு!!

சுற்றும் முற்றும் பார்த்தேன்
எல்லாம் புதிதாக தோன்றியது
சாலையோரக் கடைகள் அடுக்கு மாடிகளாக மாறியிருந்தது...

குண்டும் குழியுமான  சாலைகள் - கருப்பு போர்வை
அணிந்தாற்போல் தார் சாலையாய் பதவி உயர்வு?

மக்களின் செயல்பாடுகள் நாகரீக
வளர்ச்சியை காட்டின...

பேருந்திற்கு ஓடும் மக்கள் இல்லை 
கூச்சலும் இரைச்சலும் உள்ள சந்தை கடைகள் இல்லை
சிறுநகரின்  மாற்றம் வியப்பை தந்தது...

என் நந்தவனம் எப்படி இருக்கும்?

கற்பனைகள் சக்கரம் கட்டி கொண்டு ஓடியது
நினைவு வந்தவனாய் என் கிராமம்
செல்லும் பேருந்தில் ஏறினேன்...

மனம் ஜன்னலை விரும்பியது
என் அழகியை காண!!

வயல் வெளிகள்  மாறவில்லை
பசுமைகளும் மாறவில்லை
இவை தொன்மையின் முத்திரையோ?

அரைமணி நேர  பயணம் இயற்கையை ரசிக்க
இடம் தந்தது, நிறுத்தம் வந்ததும் இறங்கி  நடந்தேன்
உடல் சோர்வுகள் தெரியவில்லை...

புதிய உலகம் அடைந்ததை போன்ற உணர்வுகள் மனதில்
நடந்து வந்த பாதைகள் மீண்டும் நடந்து  செல்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரம் என் கிராமம்...

பச்சை சேலையை அணிந்து,
புதிய பனித்துளிகளால் அலங்கரிக்கப்பட்டு
மணப்பெண்ணாய் ஜொலித்தாள் இயற்கையான
என்  அழகி!!
 
ஆணவம், கர்வம் இல்லாத அழகு இவளிடம்!!

எதிர்படும் முதியோர் யார் பிள்ளை என்று நலம்
விசாரித்தனர் உரிமையோடு
ஊரை நெருங்க நெருங்க மனம்
பரபரப்புக்குள்ளனது....

அப்பா வரவேற்றார் சகோதரிகளும் கூட
அம்மா இல்லையென்று ஒரு ஏக்கம் அப்போது
தாய் பாசம் அறியாமல் தவழ்ந்து
வளர்ந்தவன் நான்...

அக்கம் பக்கம் கூடிவிட்டனர் மக்கள்
 நலம் விசாரிக்க, அன்றைய பொழுது இனிதே கடந்தது...

மறுநாள் காலை மனம் நண்பர்களை தேடியது
ஒரு சிலரே கிடைத்தனர் மனம் விட்டு
பேசிட கணம் கனமாய் கடந்து போனது...

நான்கு நாட்கள் கடந்தது....
துள்ளி  திரிந்த இடங்கள் பார்த்த சந்தோசம் மனதில்
இன்னும் ஒருநாள் தான் இருந்தது  ஊருக்கு செல்ல...   

கடந்த - நிகழ்கால நிகழ்வுகளை மனம்  ஒப்பிட்டது
இதோ வசதி, சந்தோசம் இப்போது!

ஆனாலும் அந்த எளிமையான சந்தோஷ 
வாழ்க்கை கொஞ்ச நாள் தானோ?
துள்ளி திரிந்த ஒத்தையடி பாதைகள் இல்லை
நாக்கில் நீர் ஊற பலகார கடைகள் இல்லை...

மட்டை பந்து விளையாடிய மைதானம் இல்லை
அன்பு சண்டை கொண்ட சிநேகிதர்கள் இல்லை
படித்த பள்ளிக்கூடம் அதன் பழமையையும்
அழகையும் இழந்திருந்தது புதிய கட்டிடமாய்!!!

நீந்திய கிணறும்  பழகிய குளமும்
வெறுமையாய் திரித்த மணலாய்....

பழம் திருடிய காடுகள் இடுகாடுகளாக மாற்றம்
எல்லாம் மாற்றமாகி என்னை ஏமாற்றின
இவைகள்  காலத்தால் கரைந்து அழிந்து போயின...

நிகழ்வுகள் மட்டும்  பொக்கிஷமாய் பதிந்திருந்தது மனதில்
நிலம் நிறம் மாறும்  மனித  உணர்வுகள்
மாறாது என புரிந்தது...

பழைய நிகழ்வுகள் தேவைப்படும்
சோர்வு  நேரத்தில்
ஒரு முறை பத்திரமாய் வைத்து
பூட்டினேன் பழைய நினைவுகளை,  நிகழ்வுகளை

இடமும் பொருளும் எங்கே?
நினைவுகள் மட்டும் என் மனதில்
பொக்கிஷமாய்....
 


Comments
Leave a Reply