இருபதாண்டுகளுக்கு பிறகு கால்கள்
ஊரை நோக்கி பயணித்தது மனமோ
கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கியிருந்தது...

கடந்த கால இன்ப துன்பங்களை நினைக்க
மனம் அமைதியாய் இருந்தது நீண்ட தூர
பயணம் இந்த வகையில் நன்மையாய் இருந்தது....

தூக்கம் வராமல் ஊரை பற்றிய சிந்தனைகள் வந்தது
கண்கள் புது பொருளை காணப்
போவது போல் ஒருவித எதிர்பார்ப்பு !!

கடந்ததை நினைத்து மனம் சிலேகித்தது
எப்பொழுது உறங்கினேன் என்று
எனக்கே தெரியவில்லை?

அலாரம் அடித்தாற்போல் 5  மணிக்கு
விழித்துக் கொண்டேன்
சூரியனை வரவேற்கும் காலை நேரம்...

இருள் விலக விலக கண்களின்
எதிர்பார்ப்பு அதிகமானது !!

பேருந்து சிறிய நகரை அடைந்தது
இறங்கினேன் பேருந்தை விட்டு பூரிப்போடு!!

சுற்றும் முற்றும் பார்த்தேன்
எல்லாம் புதிதாக தோன்றியது
சாலையோரக் கடைகள் அடுக்கு மாடிகளாக மாறியிருந்தது...

குண்டும் குழியுமான  சாலைகள் - கருப்பு போர்வை
அணிந்தாற்போல் தார் சாலையாய் பதவி உயர்வு?

மக்களின் செயல்பாடுகள் நாகரீக
வளர்ச்சியை காட்டின...

பேருந்திற்கு ஓடும் மக்கள் இல்லை 
கூச்சலும் இரைச்சலும் உள்ள சந்தை கடைகள் இல்லை
சிறுநகரின்  மாற்றம் வியப்பை தந்தது...

என் நந்தவனம் எப்படி இருக்கும்?

கற்பனைகள் சக்கரம் கட்டி கொண்டு ஓடியது
நினைவு வந்தவனாய் என் கிராமம்
செல்லும் பேருந்தில் ஏறினேன்...

மனம் ஜன்னலை விரும்பியது
என் அழகியை காண!!

வயல் வெளிகள்  மாறவில்லை
பசுமைகளும் மாறவில்லை
இவை தொன்மையின் முத்திரையோ?

அரைமணி நேர  பயணம் இயற்கையை ரசிக்க
இடம் தந்தது, நிறுத்தம் வந்ததும் இறங்கி  நடந்தேன்
உடல் சோர்வுகள் தெரியவில்லை...

புதிய உலகம் அடைந்ததை போன்ற உணர்வுகள் மனதில்
நடந்து வந்த பாதைகள் மீண்டும் நடந்து  செல்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரம் என் கிராமம்...

பச்சை சேலையை அணிந்து,
புதிய பனித்துளிகளால் அலங்கரிக்கப்பட்டு
மணப்பெண்ணாய் ஜொலித்தாள் இயற்கையான
என்  அழகி!!
 
ஆணவம், கர்வம் இல்லாத அழகு இவளிடம்!!

எதிர்படும் முதியோர் யார் பிள்ளை என்று நலம்
விசாரித்தனர் உரிமையோடு
ஊரை நெருங்க நெருங்க மனம்
பரபரப்புக்குள்ளனது....

அப்பா வரவேற்றார் சகோதரிகளும் கூட
அம்மா இல்லையென்று ஒரு ஏக்கம் அப்போது
தாய் பாசம் அறியாமல் தவழ்ந்து
வளர்ந்தவன் நான்...

அக்கம் பக்கம் கூடிவிட்டனர் மக்கள்
 நலம் விசாரிக்க, அன்றைய பொழுது இனிதே கடந்தது...

மறுநாள் காலை மனம் நண்பர்களை தேடியது
ஒரு சிலரே கிடைத்தனர் மனம் விட்டு
பேசிட கணம் கனமாய் கடந்து போனது...

நான்கு நாட்கள் கடந்தது....
துள்ளி  திரிந்த இடங்கள் பார்த்த சந்தோசம் மனதில்
இன்னும் ஒருநாள் தான் இருந்தது  ஊருக்கு செல்ல...   

கடந்த - நிகழ்கால நிகழ்வுகளை மனம்  ஒப்பிட்டது
இதோ வசதி, சந்தோசம் இப்போது!

ஆனாலும் அந்த எளிமையான சந்தோஷ 
வாழ்க்கை கொஞ்ச நாள் தானோ?
துள்ளி திரிந்த ஒத்தையடி பாதைகள் இல்லை
நாக்கில் நீர் ஊற பலகார கடைகள் இல்லை...

மட்டை பந்து விளையாடிய மைதானம் இல்லை
அன்பு சண்டை கொண்ட சிநேகிதர்கள் இல்லை
படித்த பள்ளிக்கூடம் அதன் பழமையையும்
அழகையும் இழந்திருந்தது புதிய கட்டிடமாய்!!!

நீந்திய கிணறும்  பழகிய குளமும்
வெறுமையாய் திரித்த மணலாய்....

பழம் திருடிய காடுகள் இடுகாடுகளாக மாற்றம்
எல்லாம் மாற்றமாகி என்னை ஏமாற்றின
இவைகள்  காலத்தால் கரைந்து அழிந்து போயின...

நிகழ்வுகள் மட்டும்  பொக்கிஷமாய் பதிந்திருந்தது மனதில்
நிலம் நிறம் மாறும்  மனித  உணர்வுகள்
மாறாது என புரிந்தது...

பழைய நிகழ்வுகள் தேவைப்படும்
சோர்வு  நேரத்தில்
ஒரு முறை பத்திரமாய் வைத்து
பூட்டினேன் பழைய நினைவுகளை,  நிகழ்வுகளை

இடமும் பொருளும் எங்கே?
நினைவுகள் மட்டும் என் மனதில்
பொக்கிஷமாய்....
 
 
பூக்களை கொய்து 
பூமாலை கட்டி...

வெண் பஞ்சை நெய்து 
வண்ணாடை உடுத்தி..

பாரினில் வந்த 
பாலகனை கண்டிட..

என் பாவமதை போக்கிட்ட 
பரிசுத்தர் உம்மை காணிட...

அழகிய ஆறுகால் 
தேர் பூட்டிட

பரலோக ராஜனை 
அமர்த்தி ஏற்றிட

பவனி வரும் தேர் 
விரைந்து ஓடிட...

பாரில் வலம் வரும் 
உம்மை காணிட...

எல்லா மக்களும்
ஒன்று கூடிட...

என் ஆத்மா இன்ப
வெள்ளத்தில் மூழ்கிட

இந்த பயணம் 
இனிதே தொடர்ந்திட 
நீர் கருணை பொழிந்திடும் 
என் தேவனே...
 
 
தாயை இழந்து விட்டேன் 
தவழும் வயதில்...

தாய்ப்பாலினை மறக்கவில்லை 
தாயை பிரிந்து விட்டேன்...

படுத்துறங்க தாய்மடி
இல்லை - என்னை 

கொஞ்சி பேசும் 
தாய்முகம் இல்லை... 

தத்தி நடக்கும் போது
தாங்கிக் கொள்ள அவள் இல்லை...   
 
என்னோடு ஒரு ஜென்மம் 
தாய்க்கு மனதில்லை... 

நான் சுகம் அல்ல 
சுமை என்று எண்ணினாயோ?

அவள் தூங்கி போனாள் சுகமாய்...

தாலாட்டு என்று நினைத்து 
நானும் தூங்கி விட்டேன்...

என் தாயின் மரண
ஓல  அழுகையை கேட்டு!!!!
 
 
கனவுகள் கலைந்தாலும் 
கவலையில்லை... 

கைவிடப்பட்டாலும்
நொந்துபோவதில்லை...

தோல்வியுற்றாலும் 
துவண்டு போவதில்லை...

நம்பினோர் எதிர்த்தாலும் 
நம்பிக்கை இல்லாமல் இல்லை...

சிரிக்க முடிவதில்லை 
என்றாலும் அழுவதில்லை...

தோல்வி மட்டுமே என்று 
நினைப்பதில்லை...

வெற்றி பெறாமல் 
இருக்க போவதில்லை...

சிந்தனைகள் சிதறினாலும் 
வாழ்க்கை சிதறுவதில்லை...

சோர்ந்து போய்விட 
கோழை இல்லை....

கோபுரம் ஆவதே 
என் கனவுகளின் எல்லை...

இந்த கனவுகள் இல்லாமல்
நான் இல்லை - இது 
நிஜமாவதே எந்தன் உண்மை!!!
 
 
காணாத காற்றை 
கண்டது போல...

மேக இறக்கைகளை
விரித்து பறப்பது போல...

சிறு மைனாக்களை
கொஞ்சுவது போல...

நீ கருமை நிறம் ஆனால்
வைரம் போல...

நான் உன்னை 
சுற்றுவது போல...

சந்தோச மழையில்
நனைவது போல...

பட்டு போன மரம் நான்
துளிர்ப்பது போல...

சகலமும் செய்து
சாதித்தது போல...

உன்னை தேவதையாய்
கண்டது போல..

உன்னோடு பல ஜென்மம்
வாழ்ந்தது போல...

எல்லாம் கனவா?
இல்லை இல்லை....
என் இதயத்தில் உன் உணர்வு...
 
 
பல்வகை நாட்டில்
பழம்பெரும் நாடு

பார் போற்றும்
பண்பு கொண்ட நாடு 

வறட்சி காணா
வளம் கொண்ட நாடு
 
தொல்லை மிகு உலகில்
தோய்ந்திராத நாடு

எவரும் கண்டிராத
எழில்மிகு நாடு

பல மதங்களை 
கொண்ட வானவில் நாடு 
 
பலவும் கற்று தந்து
அன்பு கொள்ளும் நாடு

நட்பை நேசிக்கும்
நல்லதொரு நாடு

ஒற்றுமையாய் இருந்து
உயர்ந்து வரும் நாடு

ஒய்யார பவனி வரும்
ஒப்பற்ற நாடு 

அன்பை பலமாக கொண்ட
வளமான நாடு 
 
என்னை பெற்றதும் இந்நாடே 
 நான் புகழ்ந்ததும் இந்நாடே 
இந்நாடே நந்நாடு இதுவே 
எங்கள் பாரத திருநாடு!!
 
 
நீ இருந்திருந்தால் நான் 
இன்னும் நல்லாயிருப்பேன்...

உலகை விட உன்னை
அதிகம் நேசித்திருப்பேன்

தவழும் வயதில்
தனிமையில் விட்டாயே?

கொஞ்சி பேசும் நாட்களை 
குறைத்து கொண்டாயே?

எல்லாம் சொல்லித்தரும் முன்
சொல்லாமல் சென்று விட்டாயே...

உன் கண்களை மூடி என் 
இதயத்தை இருட்டி விட்டாய்!

பௌர்ணமி நிலவை காண முடியா 
தேய்பிறை நான்...

தோழனாய் இருந்திருந்தால்
தவித்து கொண்டிருக்கமாட்டேன்...

தனிமையை தந்து என்னை 
சிதறடித்து விட்டாய்...

அன்பே நீ இருந்திருந்தால்
அடக்கமுள்ளவனாய் இருந்திருப்பேன் உனக்காக...

நான் பெற்று கைவிட்ட
பொக்கிஷம் போல் ஆனாயே!!

உயிர் மட்டுமே நீ இழந்தாய்
உன் பிரிவால் நான் என்னையே இழந்தேன்!!

சொல்லியிருந்தால் நானும் 
கைகோர்த்திருப்பேன் உன்னோடு...

உதிர்ந்த பூவாய் நீ 
பிரிந்த கொடியாய் நானோ?

என் அறியாத வயதில்
அமிழ்ந்து போனாயே?

உடல் தந்த தாயே என் 
உயிர் கொண்டு சென்றாயே!!

வழிகாட்டியாய் இருந்திருந்தால் 
வழிதப்பியிருக்கமாட்டேன்!!

தவமிருந்து பெற்றாய் என்றார்கள் 
ஆனால் தவிக்க விட்டுவிட்டாயே?

சொல்லி கொடுத்திருந்தால்
தோல்வி அடைந்திருக்கமாட்டேன்...

என் நினைவில்லா நேரத்தில் சென்று விட்டு 
இப்போது உன் நினைவை தருகிறாய் ஏனடி?

பக்கத்தில் இருந்திருந்தால் பழி
பெற்றிருக்க மாட்டேன்...
 
என்னை விட்டு செல்லாமல் இருந்திருந்தால் 
இந்த வார்த்தை பூக்கள் உதிர்ந்திருக்காது என் தாயே!!!


நீ இருந்திருந்தால் நான் 
இன்னும் நல்லாயிருப்பேன்….
 
 
கடல் அலைகள் வருமென்று
கடற்கரை காத்திருக்கிறது

வளர்பிறை வருமென்று
பௌர்ணமி காத்திருக்கிறது

சூரியன் வருமென்று
காலை காத்திருக்கிறது

விடுதலை வருமென்று
ஜோசிய கிளிகள் காத்திருக்கிறது

நாளை வருமென்று
நம்பிக்கை காத்திருக்கிறது
 
வெற்றி கிடைக்குமென்று
கடின உழைப்பு காத்திருக்கிறது

தோழியே நீ வருவாய் என 
என் இமைகள் காத்திருக்கிறது....
 
 
பூமியை முட்டினால்
விதைக்கு வெற்றி

சிந்தனைகள் முட்டினால்
கவிதைக்கு வெற்றி

மண்ணில் மழைத்துளி
காற்றுக்கு வெற்றி

ஒற்றுமை - அடிமை
இந்தியாவின் வெற்றி
 
கற்பனைகளுக்கு உயிரோட்டம் 
மனிதனுக்கு வெற்றி

மனிதனின் இறப்பு
பிறப்பின் வெற்றி

சந்தித்த தோல்விகள்
அனுபவத்தின் வெற்றி

எனக்கு ஏது வெற்றி
என்னை நான் உணரும்வரை......
 
 
நட்சத்திரங்களுக்கு மத்தியில்
பௌர்ணமி நிலவாய் அது உன் முகமாய்...

புயலுக்கு பின் அணைக்கும்
தென்றலாய் அது உன்  கைகளாய்...

பழங்களில் மாங்கனியாய்
அது உன் நிறமாய்...

பறவைகளில் வெண் புறாக்களாய்
அது உன் பண்புகளாய்...

இரவில் மின்மினி பூச்சியாய்
வழிநடத்தும்  அது உன் கால்களாய்...

தூங்காமல் விழித்திருக்கும்
இதயம் அது உன் கண்களாய்...

நின்று தோண்டும் என்னை தாங்கும் 
புவியாய் அது உன் உருவமாய்...

சிலுவைதனை மறைத்து சித்திர 
பூக்களாய் அது உன் தியாகங்களாய்...

கொடை ஏதும் கேக்காத மேகங்களாய் 
அது உன் வள்ளல் பண்பாய்....

தேனீ பொறாமை கொள்ளும் உன் மீது 
அது உன் சுறுசுறுப்பாய்...

காலம் எனும் நதியினில்
கரைந்து போன என் உயிர் சித்திரமே!!


மீண்டும் எப்போது வருவாய்
 என் தாயே!!!